Nool Thettam

Wednesday, December 8, 2010

பேராயர் எஸ்.ஜெபநேசன் அவர்களின் வாழ்த்துரை

தமிழ் மக்கள் மத்தியிலே நூற்பண்பாட்டு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்து வருபவர் திரு. என் செல்வராஜா. யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராக அவர் பணியாற்றிய பொழுது அவரிடத்தில் காணப்பட்ட நூல் ஆர்வத்தைக் கண்டு பிரமிப்படைந்தேன். அறிவு வளர்ச்சியும் நூல் தேட்டமும் அவருடைய இரத்தத்தில் ஊறியவை.

திரு செல்வராஜா அவர்கள் புத்தகங்களை அளைந்து மகிழ்ந்த ஒரு புத்தகப் பூச்சி என்று மட்டும் மதிப்பீடு செய்தல் தவறு. தமிழ் மக்களின் ஏமாற்றங்களையும் உள்ளக் குமுறல்களையும் கலாசார சீரழிவுகளையும் கண்டு மனம் வெதும்பியவர். தம்மைச் சூழ நடந்து வரும் நாசவேலைகளைப் பற்றி தமிழ் மக்கள் கண்மூடிகளாக இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டவர்.

இன்று தமிழ்ச் சமுதாயம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றது. இந்திய மத்திய அரசு தமிழ் மொழியை ஒரு செம்மொழியாக அறிவித்துள்ளது. ஆனால் தமிழை படிப்பவர்கள், தமிழைப் பேசுபவர்கள் தொகை நாள்தோறும் குறைந்து கொண்டே செல்கின்றது. சராசரியாக இருபத்தோரு இலங்கைத் தமிழர் தினந்தோறும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்துவரும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் ஒரு சுமையாகவே தோன்றுகின்றது.

இத்தகைய சூழலில் தமிழின் பெருமையையும் தமிழ் சமுதாயத்தின் விழுமியங்களையும் எடுத்துரைப்பதற்கு அறிஞர்கள் இல்லை. இருப்பவர்களும் அரசியல் சூழல் காரணமாக தயங்குகின்றனர். திரு செல்வராஜா தமிழ் மக்களின் அவலங்களையும் பண்டைய நூல்களின் சிறப்புகளையும் எடுத்துக்கூறக்கூடிய நிலையில் இருக்கின்றார்.

தமிழ் மக்களின் மொழியிலும் மதத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இவ்வறிஞர் இப்பொழுது இங்கிலாந்தில் வாழந்து வருகின்றார். தமிழ் மக்கள் செறிந்துவாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நமது சமுதாயத்தின் நூல் பெருமைகளை எடுத்துக்கூறுகின்றார். அத்துடன் அந்நாடுகளில் மேற்கொள்ளப்படும் தமிழ்நூல் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றார்.

மலேசியாவில் தமிழ் நூலோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஆக்கங்களும் பற்றி அவர் விரிவாக ஆய்ந்துள்ளார். இது அங்கு இனி மேற்கொள்ள வேண்டிய தமிழ் பணிகள் என்னவென்ன என்று கோடிட்டுக் காட்டுகின்றன. மலேசியத் தமிழர், தமிழ்நூல் வளர்ச்சியில் காட்டும் ஆர்வம் மன நிறைவைத் தருகின்றது. ஆனால் அங்கு இனப்பூசல்கள் தோன்றும் சூழல் ஏக்கத்தைத் தருகின்றது. இத்தகைய சூழலில் மலேசியா

நிலவரங்களை நமக்கு விளக்கக் கூடியவர் திரு. செல்வராஜா அவர்களே.
தமிழ்ச் சமுதாயம் அவருடைய நூல்தேட்டத்தை வாழ்த்தி வரவேற்று நிற்கின்றது. அவருடைய பணி நமக்கு மிகமிக அவசியமானதாகும்.

எஸ்.ஜெபநேசன்யாழ்ப்பாணம்
14.06.2008

No comments:

Post a Comment