Nool Thettam

Saturday, November 20, 2010

நூல்தேட்டம்- இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி!

கலாபூசணம் பீ.எம். புன்னியாமீன்

இனங்களுக்கிடையிலே ஒற்றுமை, புரிந்துணர்வு, பரஸ்பர நல்லிணக்கம் ஆகிய எண்ணக்கருக்கள் எழுத்துக்களிலும், மேடைப்பேச்சுகளிலும், இலத்திரனியலூடகப் போட்டிகளிலும், பெரிதாக பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் 'இலங்கையின் தேசிய இலக்கியம்” என்ற விசாலமான கருப்பொருள் பற்றிச் சிந்திக்க வேண்டியதன் அவசியம் இன்றைய காலத்தின் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.

இலங்கையின் தேசிய இலக்கியப்பரப்பில் எழுத்துத்துறை வளர்ச்சிக்கான இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகத்தினரின் பங்களிப்பு விசாலமானதாகும். 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து இத்தகைய பங்களிப்பு முனைப்புடன் இடம்பெறலாயிற்று.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஈழத்துச் சிறுபான்மையினரின் தமிழிலக்கியப் பாங்கினை ஆராயும்போது விசேடமாக மூன்று பிரதான விடயங்களின் உள்ளடக்கத்தினை அவதானிக்கலாம்.
    
  சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட இலக்கிய வடிவங்கள்.
  சமூகச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வடிவங்கள்.
  தேசிய உணர்வினை வெளிப்படுத்தக் கூடிய இலக்கிய வடிவங்கள்.

இங்கு சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் என்னும்போது பிரித்தானியரால் திணிக்கப்பட்டுவந்த மிஷனரி முறைக்கெதிராகத் தத்தமது சமயங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி, தத்தமது சமயத்தினை முதன்மைப்படுத்தி, முக்கியப்படுத்தும் வகையிலான இலக்கிய வடிவங்களை இனங்காட்டலாம்.

சமூகச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் எனும் போது மேற்குறி;ப்பிட்ட காலப்பகுதியில் அந்நிய நாட்டுக் கலாசாரத் தாக்கங்களினால் சீரழிவுகளை எதிர்நோக்கி வந்த தத்தமது சமூகத்தினரை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி தத்தமது சமூகத்தினரின் கலாசார முக்கியத்துவங்களையும், சமூக மரபுகளையும், விழுமியங்களையும் முதன்மைப்படுத்துவதனூடாக சமூகத்தினரின் கல்வி, பொருளாதார, கலாசார எழுச்சியினைத் தூண்டத்தக்க இலக்கிய வடிவங்களைக் குறிப்பிடலாம்.

அதே போல தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு எனும்போது அடிமைத்துவ ஆட்சி முறையிலிருந்து எமது தேசம் விடுதலையாக வேண்டும் என்ற சுதந்திர வேட்கையின் வெளிப்பாடான இலக்கியங்களைச் சுட்டிக் காட்டலாம். மேற்குறிப்பிட்ட மூன்று அடிப்படைகளும் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களால் முன்வைக் கப்பட்ட இலக்கிய வடிவங்களில் மாத்திரமல்ல பெரும்பான்மைச் சமூகத்தினரின் சிங்கள இலக்கியங்களிலும், முச்சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட ஆங்கில இலக்கியங்களிலும் காணமுடியும் ஆனால், இலங்கையின் சிறுபான்மைச் சமூகத்தினரின் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் முறையாக பேணப்படாமையினாலும் அவை ஆவணப்படுத்தப்படாமையினாலும் இலங்கை தேசிய இலக்கியப் பரப்பில் தமிழ் மொழிமூல இலக்கியப் படைப்புக்களினதும், படைப்பாளிகளினதும் பரிமாணம் மதிப்பீடு செய்யப்படாமலே மறைந்து போய்விடுகின்றது.

மேற்கத்திய இலக்கியங்கள், மேற்கத்திய இலக்கியவாதிகளைக் கூட எடுகோளுக்காக உள்வாங்கும் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஆய்வுகள் உள்வாங்கப்படாமலிருக்கின்றன என்றால் உரிய பதிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமலிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ்மொழி இலக்கியங்கள்மீது ஆர்வம் காட்டப்படாமலிருப்பது, இனங்களுக்கிடையே நல்லிணக்கம், நல்லுறவு என்ற கதையாடல்களில் ஈடுபடும் இக்காலகட்டத்திற்குப் பொருத்தமானதொரு விடயம் எனக்கூறிவிட முடியாது. நல்லிணக்கம், நல்லுறவு எனும் வார்த்தைப் பதங்கள் வெளிவாரியானதல்ல. உள்ளார்ந்த உணர்வுகளுடன் சங்கமித்து உள்ளார்ந்த சிந்தனைகள் பரிமாறப்படும் போதே அப்பதங்களின் அழுத்தம் யதார்த்தம் பெறக்கூடியதாக இருக்கும். இத்தகைய உள்ளார்த்தமான சிந்தனைகளை அறிந்து கொள்ள 'இலக்கியங்கள்' ஆணிவேரானவை என்றால் மிகையாகாது.

தேசிய இலக்கிய நிலைபற்றிய எண்ணக்கருவினை ஒருபுறம் வைத்துவிட்டு தமிழ் இலக்கியப்பரப்பினை நோக்கின் தமிழ் இலக்கியத்துக்குள்ளும் நாமே உருவாக்கிக் கொண்ட பிரதேச ரீதியான இலக்கியம், இனரீதியான இலக்கியம், சார்பு ரீதியான இலக்கியம் என்பன 'தமிழ்மொழி' எனும்போது உணர்வினைமீறி சுயநலமிக்க - குறுகிய போக்குமிக்கதாக மாறிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.

இத்தகைய நிலைப்பாடுகள் விஸ்வரூபமாக அமைவதினால் தமிழ் இலக்கியத்தில் கடந்த கால கட்டங்களில் சாதிக்கப்பட்டவை யாவை? சாதித்தவர்கள் யார்? முன்வைக்கப்பட்ட உணர்வுகள் யாவை? அவற்றின் பின்னணிகள் யாவை? என்பன புதிய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விடுகின்றன.

எனவே. ஈழத்துத்தமிழ் இலக்கியத்தினை எந்தவித பாகுபாடுமின்றி ஒருமுகப்படுத்த வேண்டியதும், அவற்றின் பதிவுகளைத் திரட்ட வேண்டியதும், அவற்றினை ஆவணப்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகிவிட்டது. ஏனெனில், தேசிய இலக்கிய நீரோட்டத்தில் எமது தமிழ் இலக்கியங்களின் விபரங்களையும் இணைக்க வேண்டுமானால் முதலில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக ஈழத்தில் வெளிவந்த தமிழ்நூல்கள் பற்றியும், நூலாசிரியர்கள் பற்றியும் பொதுவான பதிவுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். இந்நிலை பற்றிய உணர்வுபூர்வமான சிந்தனைகளின் வெளிப்பாடுகள் ஆயிரத்துத் தொளாயிரத்து தொன்னூறுகளில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

குறிப்பாக - இலங்கையில் முன்னணிக் கல்விமான்களுள் ஒருவரும், சிறந்த நிர்வாகசேவை உத்தியோகத்தரும், எழுத்தாளரும்  பன்னூலாசிரியருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்பதிவுகளை 'சுவடி ஆற்றுப்படைஎனும் தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

1994ம் ஆண்டில் வெளிவந்த 'சுவடி ஆற்றுப்படை' முதலாம் தொகுதியில் 1850 - 1949 காலப்பகுதியில் ஒரு நூற்றாண்டு காலத்து 198 நூல்கள் பற்றிய தகவல்களையும், 1995ம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் தொகுதியில் 1950  -1969 காலப்பகுதியில் இரண்டு தசாப்தகாலத்து 355 நூல்கள் பற்றிய தகவல்களையும், 1997 இல் வெளிவந்த மூன்றாம் தொகுதியில் 1970 - 1995 காலப்பகுதியில் வெளிவந்த 924 நூல்கள் பற்றிய தகவல்களையும், 2001ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் தொகுதியில் 1996 - 2000 காலப்பகுதியில் வெளிவந்த 500 நூல்கள் பற்றிய தகவல்களையும் பதிவாக்கி ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 'சுவடி ஆற்றுப்படை' நான்கு தொகுதிகளிலும் கண்டுகொள்ள முடியும். 1850 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் 1977 நூல்கள் பற்றிய விபரங்கள் எஸ்.எச்.எம். ஜெமீலின் 'சுவடி ஆற்றுப்படை'யில் பதிவாகியுள்ளன. இலக்கியப் பதிவு, இலக்கிய ஆவணப்படுத்தலில் இது ஒரு முக்கிய கட்டமாகும்.

இதே பணியினை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் திருவாளர் என். செல்வராஜா. அவர்களும் 21ம் நூற்றாண்டில் மேற்கொண்டு வருகின்றார். 'சுவடி ஆற்றுப்படை' இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நூல்களை மாத்திரமே ஆவணப்படுத்தியது. ஆனால், என்.செல்வராஜா அவர்களுடைய 'நூல்தேட்டம்' ஓர் இனத்தவரை மாத்திரம் மையப்படுத்தாமல் தமிழ் எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் தமிழ்மொழி மூலமாக இலங்கையர்களால் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் ஆவணப்படுத்த முயன்றுள்ளது.

நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய பணியினை தனியொருவரால் மேற்கொள்ள முடியும் என்பதை செயலில் காட்டி சாதனைபடைத்துவரும் மூத்த நூலகவியலாளரும், பன்னூலாசிரியரும், பிரபல எழுத்தாளரும், வானொலி, மேடைப்பேச்சாளரும், ஆய்வாளருமான திருவாளர் என்.செல்வராஜா அவர்கள் ஈழத்தவர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990 இல் ஆரம்பித்து 2006 வரை 'நூல்தேட்டம்' எனும் பெயரில் நான்கு தொகுதிகளை எழுதி வெளியி;டுள்ளார். ஓவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் நூல்கள் என்ற அடிப்படையில் நாலாயிரம் நூல்கள் பற்றிய விபரங்களை இதுவரை பதிவாக்கியுள்ளார். நூல்தேட்டம் முதலாம் தொகுதியில் நூலாசிரியர் என்.செல்வராஜா பின்வருமாறு தனது முன்னுரையில் குறி;ப்பிட்டிருந்தார்.
'நூல்கள் ஓர் இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலை முறைக்கும், அடுத்துவரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்கமுனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதற் காலடித்தடம் இங்கே பதியப்பெறுகின்றது.'

உண்மையிலே இது ஒரு விசாலமான பணியாகும். இதனை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வரையறை செய்வதனூடாகவோ அன்றேல் சில தொகுதிகளை வெளியிட்டு விடுவதனூடாகவோ மாத்திரம் நிறைவேற்றிவிட முடியாது. இதனால் தான் என்.செல்வராஜா அவர்கள் 'முடிவில்லாதவொரு நீண்ட பயணமாக....' இதனை வர்ணித்துள்ளார்.

தேசிய நூல்விபரப்பட்டியல் முயற்சியென்பது இலங்கைக்குப் புதிய விடயமொன்றல்ல. இலங்கையில் 'அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம்' 1885 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1976ம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதன்படி  இலங்கையில் அச்சிடப்படும் ஒவ்வொரு நூலினதும் ஐந்து பிரதிகளைப் பதிவுக்காக தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும். இவ்வாறு
அனுப்பப்படும் நூல்கள் தேசிய அரும்பொருட்சாலை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கைத் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு வைப்பிற்காக வழங்கப்படும்.

1885 ம் ஆண்டில் 'அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டத்தின்' கீழ் (179 வது அத்தியாயம்) இலங்கையில் அச்சிடப்படும் நூல்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு காலாண்டுக்கொருமுறை வர்த்தமானியின் ஐந்தாவது பிரிவாக வெளியிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 1949 இல் இலங்கை 'யுனெஸ்கோ'; அமைப்பின் அங்கத்துவ நாடாகிய பின்னர் நவீனமயப்படுத்தப்பட்ட தேசிய நூற்பட்டியலின் தேவை வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக 1952 இல் இலங்கைத் தேசிய நூல் விபரப்பட்டியலுக்கான உப ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய  நூற்பட்டியல் தொகுப்பின் முதலாவது இதழ் 1962 இல் வெளி வந்தது. 1970 ம் ஆண்டில் 17 ம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம் 'இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை' ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து தேசிய நூற்பட்டியல் இச்சபையினாலேயே வெளியிடப்பட்டது. பின்பு 1998 ம் ஆண்டில் 51ம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை (National Library and Documentation Services Board) ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சபையின் அலுவலகம் கொழும்பு 07, சுதந்திர சதுக்கம், இலக்கம் 14 இல் அமையப்பெற்றுள்ளது.

1986 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு ஐளுடீஇலக்கம் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் ஐளுடீN இலக்கத்தை வழங்கி வருவதும் இந்த தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையே யாகும். இச்சபையானது இலங்கையில் தேசிய நூற்பட்டியலை தயாரிக்கும் போது அச்சகங்களினால் தேசிய ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு: ஆவணக்காப்ப கத்தினால் கிடைக்கும் நூல்களையும், நேரடியாக தனது சபையிடம் ஐளுடீN இலக்கத்தைப் பெற்று அச்சிடப்படும் நூல்களையும் சேர்த்துக் கொள்கின்றது. ஆரம்ப காலகட்டங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்ட தேசிய நூற்பட்டியல் தற்போது மாதம் தோறும் வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் தேசிய நூற்பட்டியலில் மொழி வேறுபாடின்றி மும்மொழி நூல் களுக்கும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்ட போதிலும் கூட தமிழ் நூற்பிரிவில் ஒரு சில நூல்களே இடம்பெற்று வருகின்றன. காரணம்
 
1.    தமிழ் நூல்களை அச்சீடு செய்யும் அச்சகங்கள் 'அச்சிடுவோர், வெளி யீட்டாளர் கட்டளைச் சட்டத்தினை மதித்து அச்சிடும் நூல்களின் பிரதி களை அனுப்பிவைக்காமை.
 
2.    தமிழ்மூல எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் ஐளுடீN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ள கரிசனை காட்டாமை.
 
3.    நூற்பட்டியலைத் தயாரிக்கும் தேசிய நூலகத்தில் தமிழ் நூல்களைப் பட்டியலிடக் கூடிய ஆட்பலம் குறைவாகக் காணப்படுகின்றமை.

எவ்வாறாயினும் இதனால் பாதிப்படையப் போவது தமிழ் மொழிமூல எழுத்தாளர்கள் தான் என்றால் பிழையாகாது. ஏனெனில், தமிழ் மொழிமூல நூல்கள் எதுவிதமான பதிவுகளுக்கும், ஆவணப்படுத்தல்களுக்கு உட்படாமல் அம்முயற்சிகளும், கருத்துக்களும் அவ்வாறே மறைந்து போய்விடுகின்றன. இதனால் சம காலத்தில் வாழ்பவர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் இம்முயற்சிகள் பற்றி தெரியாமல் போய்விட இடமுண்டு.

1980 களின் பின்னர் தமிழ் நூல்கள் மற்றுமொரு பிரச்சினையையும் எதிர் நோக்குகின்றன. அதாவது 1980 களின் பின்னர் பெருந்தொகையான தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரால் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர்களின் தமிழ் மொழிமூல நூற்கள் பற்றிய பதிவுகள் சரியான முறையில் மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லாமலிருக்கின்றன. அண்மைக் காலமாக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் பிற நாடுகளில் வெளியிடப்படும் நூல்களையும் பதிவுக்கு உட்படுத்தும் புதிய பகுதியொன்றை ஆரம்பித்த போதிலும்கூட, நடைமுறையில் இது போதிய சாத்தியப்பாட்டினை வெளிப்படுத் தவில்லை.

எனவே, ஈழத்துத் தமிழ்மொழி நூல்களின் பதிவு என்பது காலத்தின் அவசியத் தேவையாகும், அதே போல அவசரத் தேவையுமாகும். இந்நிலையை நன்கு உணர்ந்திருந்த, தமிழ் இலக்கியப் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர்  இலட்சியத்தைக் கொண்ட சிரேஷ;ட நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 5000 ஸ்ரேலின் பவுண் களை தனது சொந்தப் பணத்தில் செலவிட்டு இதுவரை எழுதி வெளியிட்டுள்ள நான்கு தொகுதிகள் பற்றியும் சுருக்கமாக அவதானிப்போம்.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பெற்ற ஈழத்து தமிழ்நூல்கள் பற்றிய குறிப்புரையுடனான நூல் விபரப்பட்டியலான நூல்தேட்டம் தொகுதி 1இன் முதலாம் பதிப்பு 2002 ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக இலண்டன் வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, ஓஓஐஏ10332 ஸ்ரீ 356 பக்கங்களை கொண்டு 2114.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-0-3 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 600.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10 ஆகும்.
    
நூல்தேட்டம் தொகுதி 2இன் முதலாம் பதிப்பு 2004 ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு ரெக்னோ பிரிண்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10460 ஸ்ரீ 484 கொண்டு 21514.5 செ.மீ. அளவில் வெளி வந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-1-1 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 600.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10 ஆகும்.
    
நூல்தேட்டம் தொகுதி 3 முதலாம் பதிப்பு 2005 ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10522 ஸ்ரீ 546 கொண்டு 21514.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-2-ஒ ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 900.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10, யூரோ 15 ஆகும்.

நூல்தேட்டம் தொகுதி 4 முதலாம் பதிப்பு 2006 ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சிய, அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக கொழும்பு குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, பக்கங்களை ஓஓஐஏ10520 ஸ்ரீ 544 கொண்டு 21514.5 செ.மீ. அளவில் வெளிவந்தது. இந்நூலின் ஐளுடீN இலக்கம் 0-954-9440-3-8 ஐளுடீN இலக்கம் 1477-4690. விலை இலங்கையில் ரூபாய் 900.00, பிரித்தானியாவில் ஸ்ரேலிங் பவுண் 10, யூரோ 15 ஆகும்.

என். செல்வராஜா அவர்களுடைய மேற்படி நான்கு தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் ஆயிரம் ஈழத்தவர்களின் தமிழ்மொழி நூல்கள் என்ற அடிப்படை யில் மொத்தமாக நாலாயிரம் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பதிவு கள் அனைத்தும் 'நூலியல் விஞ்ஞானத்துக்கு' அமைய முறைப்படுத்தலுடன் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகை களின் சிறப்பு மலர்களும், சில கல்வெட்டுக்களும், தனிநூலின் வகைக்குள் அடங் கக் கூடிய கனதியான அம்சங்களுடன் வெளிவந்த சில ஞாபகார்த்த மலர்களும் இத்தொகுதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த நான்கு தொகுதிகளிலும் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் எவ்வித கால எல்லைகளுக்கும் வரையறை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பி டத்தக்கது.

பதிவுகளின் ஒழுங்கமைப்பு

நூல்தேட்டம் நான்கு தொகுதிகளும் உசாத்துணை நூல்களாகும். ஒரு நூலைப் பற்றிய நூலியல் தகவல்களைக் குறுகிய காலத்தில் வாசகர் கண்டறிய வகை செய்யும் வண்ணம் ஒவ்வொரு தொகுதியும் மூன்று பிரிவாகப் பதியப்பட்டுள்ளது.

முதற்பிரிவில், நூல் பற்றிய பிரதான பதிவுகள் பாடஒழுங்கில் வகைப்படுத் தப்பட்டு தொடர் எண் மூலம் அடையாளமிடப்பட்டுள்ளன. பாடவாரியாக ஒரு நூலைத் தேடும் வாசகர் இப்பிரிவின் மூலம் பயனடைய முடியும்.

இரண்டாவது பிரிவு, தலைப்பு வழிகாட்டியாகும். முதற்பகுதியில் நூல்கள் பாட வாரியாக முதலில் ஒழுங்கப்படுத்தப்பட்டு, பின்னர் அகர வரிசையில் காணப்படு வதால் ஒரு நூலின் தலைப்பைக் கொண்டு நூலைத் தேடவிழையும் வாசகர் இரண் டாவது பிரிவில் அகர வரிசையில் காணப்படும் தலைப்பு வழிகாட்டியின் வாயிலாக நூலின் தொடர் இலக்கத்தைக் கண்டறிந்து முதற்பகுதியில் உள்ள பிரதான பதிவைப் பார்வையிட முடியும். இங்கு தலைப்புக்கள் அகர வரிசை எழுத்தொழுங் கில் அல்லாது சொல்லொழுங்கில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது.

ஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மூல ஆசிரியர் ஆகியோரின் விபரங் களைக் கொண்டு ஒரு நூலைத்தேடும் வாசகர் மூன்றாவது பிரிவின் மூலம் பயன டைவர். இங்கு ஆசிரியர் அகர வரிசையில் நூல்களின் தொடர் எண்களைக் கண்ட றிந்து அதன் மூலம் தான் தேடும் நூலைச் சென்றடைய முடியும். வாசகரின் தேடுகை நேரத்தை குறைக்கும் வகையில் புனைபெயரிலும், இயற்பெயரிலும் எழுதும் ஆசிரியரின் ஒரு பெயரின் கீழ் மட்டும் இயன்றவரை அவரது நூல்களின் தொடர் எண்களைக் குறிக்க நூலாசிரியர் முனைந்துள்ளார்.

நூலியல் பதிவுகள்

பிரதான பகுதியில் நூல் பற்றிய தகவல் மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. முதற்பகுதியில் நூலின் தலைப்பு, உப தலைப்பு, அந்நூலின் ஆக்கத்துக்கு அதிகாரபூர்வ உரித்துடைய ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் விபரங்கள், வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம் ஆகியனவும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்ட நூலின் குறித்த பதிப்பிற்கான அச்சகத்தின் விபரமும் தரப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவலில் ஆசிரியரின் இயற்பெயர், புனை பெயர் பற்றிய குறிப்புகளும் (அறியமுடிந்தவை) தரப்பட்டுள்ளது. பதிவுக்குள்ளாகும் நூலின் உரித்தாளர் மூலநூலாசிரியராக இல்லாதவிடத்து, அவரின் பங்களிப்புப் பற்றிய தகவல் அவரது பெயரையடுத்து அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவல் குறிப்பில் வெளியீட்டாளரின் இயங்கு தளம், வெளியீட்டகத்தின் பெயர், முகவரி என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. ஆசிரியரே வெளியீட்டாளராகவும் இருக்கும்போது, நூலில் காணும் ஆசிரியரின் முகவரி வெளி யீட்டக முகவரியாகக் காட்டப்பட்டுள்ளது. நூலின் பதிப்பு விபரத்தில், பதிவுக்குப் பெறப்பட்ட நூலின் பதிப்பு விபரமும், அப்பதிப்பு வெளியிடப்பட்ட திகதியும் குறிப்பிடப் பட்டுள்ளன. நூலின் அச்சக விபரம் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.

நூலியல் பதிவின் இரண்டாவது பகுதியாக அமைவது நூலின் பௌதீகத் தகவ ல்களாகும். இதில் நூலின் பக்கங்கள், சிறப்பம்சங்கள், விலை, அளவு, தராதர எண் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இங்கு சிறப்பம்சங்கள் எனும்போது வரைபடங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. நூலில் குறிப்பிடப்படும் விலை அந்நாட்டு நாணய அலகின் மூலம் குறிப்பிடப்பட் டுள்ளது.

நூலின் பௌதீக விபரங்களில் அடுத்ததாகத் தரப்பட்டிருப்பது நூலின் அளவா கும். இது சென்றி மீற்றரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரிவில் இறுதியாக அமைவது நூலுக்கான சர்வதேச தராதர நூல் எண் (ஐவெநசயெவழையெட ளுவயனெயசன டீழழம ரேஅடிநச) ஆகும். ஈழத்துத் தமிழ் நூல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்களே இவ்விலக் கத்தைத் தாங்கி வெளிவந்திருப்பினும் அதிகரித்து வரும் அதன் முக்கியத்துவம் கருதி இவ்விலக்கம் இப்பிரிவில் இடம்பெறுகின்றது. (எழுத்தாளர்கள், வெளியீட்டாளர் களின் பயன்பாடு கருதி ஐளுடீN பற்றிய விரிவான கட்டுரையொன்று நூல்தேட்டம் முதலாவது தொகுதியில் ஒiஎ-ஒஎiii பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புத்தக வெளியீட்டாளர்களும், எழுத்தளார்களும் கட்டாயமாக வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டிய கட்டுரை இது. ஏனெனில், இலங்கையில் வெளியிடப்படும் தமிழ் நூல்கள் சர்வதேச தரத்தை அடைய உதவும் முதற்படி ஐளுடீN இலக்கம் பெறுவதே என்பதினால் இத்தகைய விளக்கம் கட்டாயத் தேவையானதாகும். 

நூலியல் தகவலின் மூன்றாவது, இறுதிப்பிரிவு நூல்பற்றிய சுருக்கக் குறிப்பாகும். இது ஒரு திறனாய்வுக் குறிப்பாகவோ, விளம்பரமாகவோ அல்லாது சிறு அறிமுகமாக மாத்திரம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அறிமுகத்தின் மூலமாக நூலின் உள்ளடக்கத்தை இலகுவாக இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

பகுப்பாக்கம்
    
இந்நூல்களின் பிரதான பகுதியில் நூல்கள் பாட ஒழுங்கில் தொகுக்கப் பட்டுள்ளன. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாடஒழுங்கு வரிசை, தூவியின் தசாம்சப்பகுப்பு முறையாகும். (னுநறநல னுநஉiஅயட ஊடயளளகைiஉயவழைn ளுஉhநஅந) தெற்கா சிய, ஐரோப்பிய  நூலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இப்பகுப்பு முறை தமிழ் வாசகர்களுக்குப் புதிதானதொன்றல்ல என்ற வகையில் இப்பகுப்பாக்கம் பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். இப்பகுப்பாக்கத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று பிராந்தியத் தேவைகருதி இப்பகுப்பு முறையில் தேவைப்படும் மாற்றத்தைப் புகுத்த முடியும் என்பதாகும். ஈழத்துத் தமிழ் நூல்களின் பகுப்புத் தேவை கருதி இப்பகுப்பு முறை சில மாற்றங்களுடன் பயன் படுத்தப்பட்டுள்ளமையை அவதா னிக்கலாம். இப்பகுப்பாக்கம் அறிவுத்தேட்டத்தை முதலில் பத்துப் பெரும் பிரிவுக்குள் அடக்குகின்றது. அவை பின்வருமாறு:


000 - 099 பொதுப்பிரிவு
100 - 199 மெய்யியல்துறை
200 - 299 சமயங்கள்
300 - 399 சமூகவிஞ்ஞானங்கள்
400 - 499 மொழியியல்
500 - 599 தூய விஞ்ஞானங்கள்
600 - 699 பிரயோக விஞ்ஞானம், தொழிநுட்பம்
700 - 799 கலைகள், நுண்கலைகள்
800 - 899 இலக்கியம்
900 - 999 புவியியல், வரலாறுகள்


பின்னர் ஒவ்வொரு பெரும் பிரிவும் பத்து உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளன. அந்த உப பிரிவுகள் ஒவ்வொன்றும் மேலும் பத்து பிரிவுகளாக வகுக்கப்பட் டுள்ளன. நூலியல் துறையில் பரிச்சயமில்லாத சாதாரண ஒரு வாசகனாலும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இப்பகுப்பு முறையை இலகுவானதாக முன் வைத்திருப்பதனூடாக  திரு. என். செல்வராஜா தான் ஒரு அனுபவமிக்க சிரேஷ;ட நூலகர் என்பதை நிரூபித்துள்ளார்.

சிறப்புப் பதிவுகள்
    
நூல்தேட்டம் நான்கு தொகுதிகளையும் ஆய்வுரீதியாக நோக்குமிடத்து இரண்டு விடயங்களை சிறப்புப்பதிவுகளாக அவதானிக்கலாம்.

1.    இலங்கை தொடர்பான பன்னாட்டவர்களின் தமிழ்ப்படைப்புக்கள்
2.    முன்னைய பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள்.

நூல்தேட்டம் முதலாம் தொகுதியில் காணமுடியாத விசேட சேர்க்கையொன் றினை இரண்டாம் தொகுதியிலிருந்து காணமுடிகின்றது. அதாவது இன்றைய ஈழத்து இனப்பிரச்சினையின் சர்வதேசமயப்படுத்தல் காரணமாக ஈழத் தமிழரல்லாத பன்நாட்ட வர்களிடையே உருவாகிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிய தேடலின் விளை வாக, தமிழகத்திலும், மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் ஈழத்தமிழர் பற்றிய நூல்க ளின் வரவு அதிகரித்திருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றில் பல தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன்விளைவாக, நூல்தேட்டத்தில் இவ்வாக்கங்களுக்கான ஆவணமாக்கலும் அவசியம் என்ற அடிப்படையில் தனியானதொரு பிரிவாக அவை சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

நூல்தேட்டம், ஈழத்தமிழ்மொழி நூலியல் முயற்சிகளில், இயன்றவரை நிறை வான ஆவணமாக்கலையே மேற்கொள்ள விழைவதை நான்கு நூல்தேட்டங்களினூ டாகவும் நூலாசிரியர் மேற்கொண்டுள்ள பிரயத்தனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. முன்னைய தொகுதியில் இடம்பெற்ற ஒரு நூல் திருத்திய மறுபதிப்பாக வெளியிடப் பட்டால், அது பற்றிய தகவலையும் பின்னைய தொகுதியில் நூலாசிரியர் தர எத்த னித்துள்ளார். தொகுப்பு முயற்சியில் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இவை கொள்கையளவில் புதிய பதிவாகக் கருதப்படாது, அப்பதிவிற்குத் தனியான தொடர் இலக்கத்தை வழங்காது, அதை பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளார். வாசகர்களின் பயன்கருதி குறிப்பிட்ட இந்நூற்பதிவின் மூலப்பதிப்பின் தொடர் இலக்கத்தையும் குறிப்புப் பகுதியில் சேர்த்துள்ளார்.

கூட்டுமொத்தமாக நோக்குமிடத்து இந்நான்கு தொகுதிகளும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியதிகளை உள்வாங்கியிருப்பதும், முறைப்படுத்தல், எளிமையாக்கல், இவற்றுடன் விஞ்ஞானத்தன்மைமிக்கதாகவும் இருப்பது நூலாசிரியரின் அனுபவத் திறனை வெளிப்படுத்தும் முத்திரையாகப் பிரகாசிக்கின்றதென்றால் மிகையாகாது.
               
நூலியல் பதிவுகள்

1970களின் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்மொழி நூல்களைப் பட்டியலிடும் சில நடவடிக்கைகள் தனிப்பட்ட சிலரால் மேற்கொள்ளப் பட்டன. முழுமையான முயற்சிகளாக அன்றி ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த பட்டியல்களாகவோ (உதாரணமாக சிறுகதை, நாவல் என்ற அடிப்படை யில்), அன்றேல் சில எழுத்தாளர்களின் அல்லது வெளியீட்டாளர்களின் வெளியீடுகளைப் பட்டியல்படுத்தும் முயற்சிகளாகவோ இருந்தன. அதேபோல 1979ம் ஆண்டில் பேருவளை நளீமிய்யா இஸ்லாமிய நூலகத்துக்காக வேண்டி 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - இலங்கை நூல்களின் தேர்ந்தெடுத்த பட்டியல்' எனும் நூற் பதிவு எல்.எம். கமால்தீன் அவர்களால் எழுதப்பட்டது. ஆனால், இம்முயற்சிகள் அனைத்தும் தொடர்ச் சியான நடவடிக்கைகளாகவோ, அன்றேல் இலங்கையின் நூலியல் வரலாற்றின் நூற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை யிலோ அமையவில்லை.

பேராதனைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த அமரர் எச்.ஏ.ஐ. குணதி லக்கா A Bibilography of Ceylon; a Systematic Guide to the Literature on the Land, People, history and culture published in the Western languages from the Sixteenth century to the present day என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியலை 1970 - 1983 காலப்பகுதியில் 5 தொகுதிகளாக வெளியிட்டார். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உசாத்துணை நூலாக இது இன்றும் திகழ்கின்றது.
          
எனவே> முழுமைத் தேடிச் செல்லும் நூற்பதிவு முயற்சியில் நான் ஏற்க னவே குறிப்பிட்டதைப் போன்று பின்வரும் மூன்று ஆவணங்களும் முக்கியம் பெறு கின்றன.

1. தேசிய நூற்பட்டியல் 
2. சுவடி ஆற்றுப்படை
3. நூல்தேட்டம்


மேற்படி மூன்று ஆவணப்பதிவுகளையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது இலங்கையில் வெளியான நூல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை பொது நோக்காகக் கொண்டிருந்த போதிலும் கூட தோற்றுநிலை, உள்ளடக்க வடிவம், மக்களைச் சென்றடையும் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

'தேசிய நூற்பட்டியலா'னது அரசாங்க ஆதரவுடன் நிறுவன ரீதியாக மேற் கொள்ளப்படும் ஒரு முயற்சி. தமிழ்மொழி மூல நூல்கள் மாத்திரமல்லாமல் இலங்கையில் வெளிவரும் ஏனைய மொழி நூல்களும் இங்கு உள்வாங்கப்படு கின்றன. ஆனால், நூல்களை 'தேடிப்பெறல்' என்ற நிலைக்கு அப்பால் நின்று கிடைக்கும் நூல்களையே பதிவாக்கி வருகின்றது. சட்டரீதியாக 'அச்சகங்கள் பதி வுக்கான வழியை வகுக்கும்' என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நடைமுறையில் இந்நிலைமை பெருமளவிற்கு சாத்தியப்படவில்லை. தான் அச்சிடும் நூல்களின் ஐந்து பிரதிகளை ஆவணக்காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் காணப்பட்ட போதிலும் கூட இதை மீறும் அச்சகங்களுக்கு சட்டத்தால் ஒன்றும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, அச்சகங்களின் அசிரத்தை - தெரியாமை  போன்ற காரணங்களும்: கிடைக்கும் நூல்களின் பதிவு என்ற நிலையும் முழுமை யான தேசிய நூற்பட்டியல் உருவாக்கத்துக்குத் தடைக் கற்கள் எனலாம்.

'சுவடி ஆற்றுப்படை' ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களுடைய நூல்களை மாத்திரம் பதிவாக்கியுள்ளது. கொழும்பு ஆவணக்காப்பகம், தேசிய நூலகம், அரும் பொருட்சாலை நூலகம் ஆகிய இடங்களில் பதிவுகளைப் பெற்றும், தனிப்பட்ட நூல் தேடுதல்களை நேரடியாக மேற்கொண்டும் தரவுகள் பெறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
    
ஆனால், நூல்தேட்டம் நான்கு தொகுதிகளிலும் பதிவாக்கப்பட்டுள்ள நாலா யிரம் புத்தகப் பதிவுகளும் நேரடி தேடலின் வெளிப்பாடே. திருவாளர் என். செல்வராஜா அவர்கள் 1985 ம் ஆண்டிலிருந்து தனது குடும்பத்துடன் ஐக்கிய இராச் சியத்தில் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றார். எனவே, இலங்கையின் ஆவணக்காப் பகப் பதிவுகளையோ, அன்றேல் தேசிய நூற்பட்டியல் பதிவுகளையோ அவரால் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு மிகவும் அரிது. தான் பதிவு செய்துள்ள நாலா யிரம் நூல்களையும் நேரடியாகப் பார்த்து தானே குறிப்பெடுத்து நூல்தேட்டத்தில் சேர்த்துள்ளமை சிறப்பம்சமாகும்.

எனவேதான் தேசிய நூற்பட்டியல் நூற்பதிவிலும், சுவடி ஆற்றுப்படை நூற் பதிவிலும் காண முடியாத ஒரு விசேட பண்பினை 'நூல்தேட்டத்தில்' காண முடிகி ன்றது. அதாவது நூல்பற்றிய சுருக்கக் குறிப்பே அந்த விசேட பண்பாகும். பதிவாக இடம் பெற்றுள்ள நூல்களின் முக்கியமான உள்ளடக்கம், அந்நூலின் மூலம் தெரி விக்கப்படும் அடிப்படைக் கருத்து என்பவற்றை சில வரிகளில் சுருக்கமாகவும், இறுக் கமாகவும் தெரியப்படுத்தி அந்நூல் பற்றிய உணர்வினை உள்வாங்க வைக்கின்றார். இதனால் தான் இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக நூல்தேட்டத்தைக் குறிப்பிட்டேன். முதலாம் தொகு தியில் நூல்கள் பற்றிய குறிப்புக்கள் இரத்தினச் சுருக்கமாகக் காணப்பட்ட போதிலும் கூட இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகளில் சுருக்கக் குறிப்பினூடாக நூல் பற்றிய தெளிவான விளக்கத்தினைப் பெற முடிகின்றது. இதனை ஒரு சிறு உதார ணம் மூலமாக விளங்கலாம். நூல்தேட்டத்தில் 'ஸகாத் கோட்பாடும் நடைமுறையும்' எனும் புத்தகப் பதிவு இடம் பெற்றுள்ளது. (பதிவு எண் 2173) இது ஒரு இஸ்லாமிய நூல் 'ஸகாத்' என்பது ஒரு அரபிப்பதம். நூலாசிரியர் என்.செல்வராஜா அவர்கள் தனது சுருக்கக் குறிப்பில் இந்நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'இஸ்லாம் மதம் 5 பிரதான கடமைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் மூன்றாவது கடமை 'ஸகாத்' எனப்படும் ஏழைவரி யாகும். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையும் முகமாக வசதியுள்ள ஒவ் வொரு முஸ்லிமும் தமது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட வீதத்தை ஏழை களுக்கு  'ஸகாத்' தாக வழங்க வேண்டும். இது வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் கட்டாயமானதாகும். இதனை விளக்கும் விரிவான ஆய்வு-விளக்கமாக அமையும் இந்நூல் பிரதானமாக நான்கு தலைப்புக ளில் ஆராயப்பட்டுள்ளது. 1. ஸகாத் கோட்பாடும் முக்கியத்துவமும், 2. ஸகாத் விதியாகும் பொருட்களும் அவற்றின் அளவுகளும், 3. ஸகாத் வழங்கக் கடமைப்பட்டோரும், அதனைப் பெறதகுதியுடையோரும், தகுதி யற்றோரும், 4. ஸகாத் சேகரிப்பும் விநியோகமும். இந்நூல் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைக் கப்பட்டி ருக்கும் இலங்கை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ;ட விரிவுரை யாளர்களான நால்வர் இணைந்து எழுதியதாகும்.'

திரு. என். செல்வராஜா அவர்கள் ஒரு இஸ்லாமியர் அல்ல. இருப்பினும் இத்தகைய விளக்கத்தினை அவர் தனது சுருக்கக் குறிப்பினூடாக விளக்கியுள்ளார் என்றால் தான் பதிவுக்குட்படுத்தும் நூல்களை அவர் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அதே நேரம் இந்தக் குறிப்பினைப் படிக்கும் எவருக்கும் நூலின் தன்மையினை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இதே முறையினைத்தான் நூல்தேட்டத்தில் இடம்பெற்றுள்ள சகல நூல் பதிவுகளிலும் காணமுடிகின்றது.

ஈழத்தைச் சேர்ந்த பல தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிடன். டென்மார்க், அவுஸ்திரேலியா போன்ற பல்வேறு மேற்கத்தைய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழ்ந்த சூழலில் இருந்து மாறுபட்ட சூழலில் புலம்பெயர்ந்து வாழும்போது தமிழ்மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும், பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, புலம் பெயர் நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளும், நூலியல் முயற்சி களும் விசேடமாக ஆராயப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். 'நூல்தேட்டத்தில்' இத்தகைய புலம்பெயர் தமிழ் நூல்களும் பதிவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். புலம்பெயர் தமிழ்நூற்களின் பதிவு நூல்தேட்டம் நான்கு தொகுதிகளிலும் சுமார் நானூறுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் எந்தவொரு எழுத்தாளராலும் மேற்கொள்ளப்படாத தனிமுயற்சி எனத் துணிந்து கூற லாம்.

நூலாசிரியர் என். செல்வராஜா அவர்கள் 'நூல்தேட்டத்தை' நூலுருவாக்கு வதுடன் மாத்திரம் நின்றுவிடாது நூல்தேட்டத்தினை உலகில் பல பாகங்களிலும் ஆவணப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறித்துக்காட்டக் கூடிய ஒரு விடயமாகும்.

'நூல்தேட்டம் நூற்றொடர்' தனியொரு மனிதனால் மேற்கொள்ளப்படும் விசாலமான ஒரு முயற்சி என்பதை நான் அறிவேன். இந்த ஆவணப்பதிவு முயற்சிக்காக வேண்டி அவர் பல நாடுகளுக்கும் அடிக்கடி செல்கின்றார். தனது விடுமுறை நாட்களில் கூட இரவு, பகல் பாராது தனது நேரத்தை ஒதுக்கி பதிவுக்கான சான்றுகளைத் தேடி அலைகின்றார். தனது சொந்தப் பணத்தில் தமிழ் நூல்களை கொள்வனவு செய்து பதிவுகளைத் திரட்டுகின்றார். உண்மையிலே ஒரு தியாக அடிப்படையில் இந்தப் பதிவுகளை ஆவணப்படுத்தி வருகின்றார் என்றால் மிகையாகாது. இருப்பினும் 'நூல் ஆய்வு' என்ற கண்ணோட்டத்தில் சில குறைக ளையும் காணக் கூடியதாக உள்ளது.

1.    'நூல்தேட்டம்' நூற்றொடரில் சமகாலத்தும், அண்மைக் காலத்தும் நூல்களே பெருமளவில் பதிவாகியுள்ளன. பழைய தமிழ் நூல்களின் பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. பழங்காலத்துத் தமிழ் நூல்களையும் பதிவுக்கு உட்படுத்த முடியுமாயின் அந்நூல்கள் பற்றிய தரவுகளையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியுமானதாக இருக்கும்.

திரு. செல்வராஜா அவர்களின் புலம்பெயர் நிலையைக் கருத்திற் கொள்ளும் போது இத்தகைய பதிவுகளை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவாகவே அவருக்கு உள்ளதை மறுக்க முடியாது. எனவே, ஈழத்தில் வாழும் பழம்பெரும் எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் இத்தகைய இலக்கியங்களை செல்வராஜா அவர்களுக்கு வழங்க ஏற்பாடுகளைச் செய்வார்களாயின் இக்குறை பாட்டையும் அவரால் களைய முடியும் என எண்ணுகின்றேன்.

2.  (அ)    சில இடங்களில் நூல்வெளியீட்டொழுங்கு பேணப்படாம   லுள்ளது. அதாவது பதிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு நூலின் பல தொகுதிகள் வெளிவந்திருப்பின் பின்னர் உள்ள தொகுதி விபரங்கள் நூல்தேட்டத்தின் முன்னைய தொகுதி களிலும், முன்னாள் உள்ள தொகுதி விபரங்கள் நூல்தேட் டத்தின் பின்னைய தொகுதிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மயக்கம் வாசகர்களையும், ஆய்வாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தலாம்.

    (ஆ)   சுவடி ஆற்றுப்படையுடன் ஒப்பு நோக்கும் பொழுது நூல் தேட்டத்தில் ஆண்டு ஒழுங்கில் பதிவாக்கப்படவில்லை. 'சுவடி ஆற்றுப்படை' முதலாம் தொகுதியானது 1868 ம் ஆண்டில் முஸ்லிம்களால் எழுதப்பட்ட முதல் நூல் எனக் கருதப்படும் 'பேருவளை செய்;கு முஸ்தபா வலியுல்லாஹ் வின்' 'மீஸான் மாலை' முதல் - 1949 ம் ஆண்டுவரை வெளிவந்த 198 நூல்களையும் ஆண்டொழுங்கில் பதிவாக் கியுள்ளார். இதே போன்றே சுவடி ஆற்றுப்படை இரண்டாம் தொகுதியில் 1950 1969ம் காலப் பகுதியிலும், மூன்றாம் தொகுதியில் 1970 1995 காலப் பகுதியிலும், நான்காம் தொகுதியில் 1996 2000 காலப் பகுதியிலும் வெளியான நூல்கள் பதிவாகியுள்ளன. ஆனால், நூல்தேட்டத்தில் ஆண் டொழுங்கு எவ்விடத்திலும் பேணப்படவில்லை.

'நூல்தேட்டம்' காலவரையறை விதிக்கப்படாமல் தொகுக்கப்பட்டுள்ள ஓர் ஆவணக்களஞ்சியமாகும். எனவே, 19ம் நூற்றாண்டில் வெளியான நூல்களும் பதியப் படலாம். 21ம் நூற்றாண்டில் வெளியான நூல்களும் பதியப்படலாம். குறிப்பாக நூலாசிரியர் தனக்குக் கிடைக்கும் நூல்களை கிடைக்கும் ஒழுங்கிலே பதிவாக்கு வதினால் மேற்படி குறைபாடுகள் தவிர்க்க முடியாமல் போவது இயற்கை. 'குறிப்பாக தனக்குக் கிடைக்கும் அல்லது தன் கண்களால் பார்வையிடும் நூல்களை மாத்திரம் பதிய வேண்டும். அப்போது தான் நூறுவீதம் ஆதாரபூர்வமானதாகவும், உண்மையுள் ளதாகவும் தனது பதிவுகள் அமையும்' என்ற கொள்கையில் திரு. செல்வராஜா உறுதியாக இருப்பதினால் ஆண்டொழுங்கினைப் பேண முயன்றால் அவரால் 'நூல் தேட்டம்' முயற்சியே சாத்தியமற்றும் போகலாம். எவ்வாறாயினும் முதல் ஐந்து தொகு திகளும் வெளியானவுடன் ஐந்து தொகுதிகளையும் தொகுத்து நூல் தேட்டத்தினை 'மெகா' புத்தகமாக கொண்டுவரும் எண்ணம் நூலாசிரியருக்குண்டு. அச்சந்தர்ப்பத்தில் ஆண்டொழுங்கினைப் பேணி தொடரிலக்கமிடுவாராயின் மேற்படி குறை பாடுகளை ஓரளவேனும் நிவர்த்திக்க முடியுமானதாக இருக்கும்.

3.  (அ)    நூல்தேட்டம் நான்கு தொகுதிகளையும் நோக்கும் போது  மூன்றாவது தொகுதியில் அச்சுப்பதிப்பு குறை தரத்தில் உள்ளது. குறிப்பாக மூன்றாம் தொகுதியில் 489ம் பக்கம் முதல் 522ம் பக்கம் வரை தலைப்பு வழிகாட்டியும், ஆசிரியர் வழிகாட்டியும் தரப்பட்டுள்ளன. அச்சீட்டில் இவை மங்கலான அச்சில் இருப்பதினால் சிறிது காலத்தில் இவை அழிந்துவிடலாம்.

    (ஆ)  புத்தகம் கட்டுதல் (பைண்டிங்) முறையிலும் திருப்தி கொள்ளமுடியவில்லை. முதலாம், இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை ஏழெட்டுமுறை புரட்டும்போது தாள்கள் வேறாகிவிடுகின்றன.
    நூலின் உள்ளடக்க அமைப்பு விடயங்களில் காட்டும் ஆர்வத்தைப் போலவே நூலின் அச்சீட்டின் போதும் நூலாசிரியர் ஆர்வம் காட்டுதல் அவசியமானதாகும். 'நூல்தேட்டம்' ஓர் ஆவணப்பதிவாக்கள் புத்தகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, நீண்ட காலம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷமாக நூல்தேட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் இருப்பதினால் தரமான சீரான அச்சுப்பதிவுடன் தாள்கள் வேறாகி விடாத வண்ணம் 'கடின மட்டை கட்டுதல்' (ஹார்ட் போர்ட் பைண்டிங்) மூலம் புத்தக நிறைவினை மேற்கொள்வது அவசியமானதாகும். நூல்தேட்டத்தின் முதலாம் தொகுதி ஐக்கிய இராச்சியத்தில் அச்சாக்கப்பட்டது. ஏனைய மூன்று தொகுதிகளும் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டன. எனவே, பதிப்பு வேலைகளை நூலாசிரியரினால் நேரடியாக அவதானிக்க முடியாவி டினும் கூட அவர் ஒரு பிரதிநிதியை நியமித்தாவது அவற்றை அவதானிக் கலாம்.

        

          
முடிவுரையும், கருத்துரையும்.
          
'நூல்தேட்ட முயற்சி' என்பது இலகுவான பணியல்ல. இலங்கை தேசிய ஆவணக்காப்பக நூலகத்தில் சுமார் ஒன்பது இலட்சம் நூல்களும், பேராதனைப் பல்கலைக் கழக நூலகத்தில் சுமார் ஐந்து இலட்சம் நூல்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை தமிழ்மொழி மூலமாக பல ஆயிரக்க கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆகவே, 'நூல்தேட்ட' முயற்சியில் முழுமையினைக் காண்பதென்பது மிகவும் கடினமான முயற்சியாகும்.

திரு. என். செல்வராஜா அவர்கள் ஆண்டொன்றுக்கு ஆயிரம் பதிவுகள் என்ற ரீதியில் தனது தேடல் பணியினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். 'நூல்தேட்டம்' நான்காம் தொகுதியின் கணனிப்படுத்தல் வேலைகள் நிறைவடைந்த அடுத்த நிமிடத் திலே ஐந்தாம் தொகுதிக்கான பதிவுகளையும் ஆரம்பித்துவிட்டார். எனவே, இதே வேகத்தில் நூலாசிரியர் செல்லுமிடத்து ஈழத்துத் தமிழ் நூல்தேட்டத்தின் முழுமையினை நோக்கி அவரால் இலகுவாகப் பயணிக்க முடியும். பொதுவாக 'தேசிய நூற்பட்டிய'லுக்கு தமிழ்மொழி மூலமான நூல்கள் பதிவுக்காக அனுப்பப்படாத நூல்கள் கூட 'நூல்தேட்டத்தின்' பதிவுக்காக ஐக்கிய இராச்சியத்துக்கு நேராக அனுப்பி வைக்கப்படுகின்றதென்றால் இப்பயணத்தில் என். செல்வராஜா அவர்கள் பெற்றுள்ள 'வெற்றி'யையே புலப்படுத்துகின்றது. அதேபோல எதுவிதமான பதிவுகளுக்கும் உட்படுத்தப்படாத இந்தியாவில் அச்சிடப்படும் ஈழத்தவர்களின் தமிழ்மொழி நூல்களும் பெருமளவிற்கு செல்வராஜாவுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப் படுகின்றன.

நிச்சயமாக பக்கசார்பற்ற தன்மை, இனவேறுபாடுகளையும், பிரதேச வேறுபாடு களையும் கருத்திற் கொள்ளாத மனோபக்குவம், அயராத முயற்சி, தொடர்ச்சியான செயற்பாடு, உறுதியான இலட்சியம் போன்ற பண்புகளே திரு. என். செல்வராஜா அவர்களின் இத்தகைய வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படையை வழங்கி வருகின்றன என்பது வெள்ளிடை மலை.

இத்தகைய பெறுமதிமிக்க நூல்தேட்டஆவணத்தை தமிழ்மொழியில் மாத்திரம் அல்லாமல் இலங்கையின் தேசிய மொழியான சிங்களத்திலும், சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் வெளிக்கொணரக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படுமிடத்து தேசிய இலக்கிய நீரோட்டத்தில் தமிழ்மொழி நூல்களையும் இனங்காட்ட வாய்ப்பாக அமையும். இதனைத் தனியொரு மனிதனால் சாதிப்பது சிரமமான காரியம், அதிலும் குறிப்பாக திரு. செல்வராஜா அவர்களால் இப்பணி மேற்கொள்ளப்படக் கூடாது. ஏனெனில், அவர் தனது நூல் தேட்டத்தினை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டால் தேசிய சொத்தாகக் கருதப்படக் கூடிய 'நூல்தேட்டம்' தொடரின்மூல வேலைகள் ஸ்தம்பித்துவிடலாம். எனவே, மதத்தையும், கலாசாரத்தையும், தமிழ்மொழியினையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்து சமய கலாசார அமைச்சு, அன்றேல் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இதுவிடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
    
                இவைகளுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம் போன்ற எண்ணக் கருத்துக்களை முதன்மைப்படுத்திவரும் குறிப்பிட்ட அரசநிறுவனங்கள் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும், தமிழ்மொழி மூலமான நூல்களின் தன்மையினையும், உணர்வி னையும் பெரும்பான்மைச் சமூகத்தினரின் அவதானத்துக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான முதற்படி இதுபோன்ற ஆவணப்பதிவுகளை மொழிபெயர்த்து சிங்கள மொழி மூலமும், ஆங்கில மொழி மூலமும் வெளிக்கொணர்வதேயாகும்.

                நிறைவாக'நூல்தேட்டம்' நான்கு தொகுதிகள் பற்றியும் சுருக்கமாகப் பிரஸ்தாபிப்பதென்றால்..... 'நூல்தேட்டம்' என்பது ஒரு தேசிய சொத்து. நூல்தேட்டம் முயற்சிகள் இடைநடுவே நின்றுவிடாது பாதுகாக்க வேண்டியது எழுத்தாளர்களினதும், வெளியீட்டாளர்களினதும் கடமையாகும். திரு. செல்வராஜா அவர்களும் இந்த முயற்சியினை இடைவிட்டு விடாது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிச்சயமாக தமிழ் இலக்கிய வரலாற்றில் 'நூல்தேட்டம்' என்பது ஓர் சாகாவரம் பெற்ற ஓர் ஆவணமாக பதிவாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.