நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின் பதிவு எமது வளத்தை, அறிவின் தேட்டத்தை எமது தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை, ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுத்தேட்டத்தின் கனதியை, பதிவாக்க முனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதற் காலடித் தடத்தை “நூல்தேட்டம்” என்ற பெயரில் 2000ம் ஆண்டிலிருந்து பதிவுசெய்து வருகின்றேன்.
இதுவரை காலமும் இலங்கைத் தமிழரின் நூல்களைப் பதிவுசெய்யும் முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லையா என்றொரு கேள்வி எழலாம். இலங்கையில் தேசிய நூலகத்தின் வாயிலாக நீண்டகாலமாக இலங்கைத் தேசிய நூல்விபரப்பட்டியல் என்ற பெயரில் ஒரு நூற்பட்டியல் காலாண்டு சஞ்சிகையாக வெளியிடப்பட்டு வருகின்றது என்பது பெயரளவில் உண்மையே. பல்வேறு நிர்வாக அரசியல் மாற்றங்களுக்குள் சிக்குண்டு ஒழுங்கற்ற கால இடைவெளியில் இது வெளிவந்துகொண்டிருக்கின்றது. தற்போது, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்திலுள்ள இலங்கைத் தேசியநூலகத்தின் பொறுப்பில் இது வெளியிடப்படுகின்றது. உரிய காலத்தில் பிரசுரமாகாமலும், பரவலாக விநியோகிக்கப் படாமலும், இழுத்தடிப்புச் செய்யப்படுவதாலும் முழுமையான நூல்களின் பட்டியலை என்றுமே வெளியிடமுடியாமல் போனதாலும் இலங்கைத்தேசிய நூற்பட்டியல் இலங்கையில் பிரபல்யமாகவில்லை.
இலங்கைத் தேசிய நூற்பட்டியலில் மொழிவேறுபாடின்றி, மும்மொழி நூல்களுக்கும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பினும், தமிழ் நூற்பிரிவில் அரசாங்கப் பிரசுரங்களும் ஒரு சில தமிழ் நூல்களுமே இடம்பெற்று வந்துள்ளன. அச்சக, வெளியீட்டாளர் சட்டமூலத்தை மதித்து சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்கத் தமிழப்பிரதேச அச்சகங்களோää வெளியீட்டாளர்களோ எழுத்தாளர்களோ முன்வராமையால் அங்கு தமிழ் நூல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்பது அரசதரப்பினரின் வாதம். தாங்கள் அனுப்பி வைக்கப்படும் தமிழ் நூல்களைப் பட்டியலிடக்கூடிய தமிழ் அலுவலர்கள் ஓரிருவரே அங்குள்ளதால், தமிழ்நூல்கள் பதிவுக்குட்படுத்தப்படாமல் கேட்பாரற்று முடக்கப்படுகின்றன என்பது தமிழ் நூல் வெளியீட்டாளர்களின் வாதம்.
இலங்கைத் தேசிய நூற்பட்டியலில் மொழிவேறுபாடின்றி, மும்மொழி நூல்களுக்கும் கொள்கையளவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பினும், தமிழ் நூற்பிரிவில் அரசாங்கப் பிரசுரங்களும் ஒரு சில தமிழ் நூல்களுமே இடம்பெற்று வந்துள்ளன. அச்சக, வெளியீட்டாளர் சட்டமூலத்தை மதித்து சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்கத் தமிழப்பிரதேச அச்சகங்களோää வெளியீட்டாளர்களோ எழுத்தாளர்களோ முன்வராமையால் அங்கு தமிழ் நூல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்பது அரசதரப்பினரின் வாதம். தாங்கள் அனுப்பி வைக்கப்படும் தமிழ் நூல்களைப் பட்டியலிடக்கூடிய தமிழ் அலுவலர்கள் ஓரிருவரே அங்குள்ளதால், தமிழ்நூல்கள் பதிவுக்குட்படுத்தப்படாமல் கேட்பாரற்று முடக்கப்படுகின்றன என்பது தமிழ் நூல் வெளியீட்டாளர்களின் வாதம்.
இன்றைய யதார்த்த நிலை என்னவெனில் ஈழத்துத் தமிழ் நூல்களில் பெரும்பான்மை யானவை இலங்கைக்கு வெளியே தமிழகத்திலும், புகலிடத்திலும் அச்சிடப்படுவதாகும். வெளியீட்டாளர்கள்; பெரும்பாலும் நூலாசிரியராகவே (Author Publisher) இருப்பதால், வெளியீட்டுச் செலவைக் குறைக்கவும், தமிழகத்தின் பாரிய நூல் விநியோக வலையமைப்பினுள் இணைந்துகொண்டு பரந்தளவில் தமிழகச் சந்தை வாய்ப்பைப் பெறவும் தமது நூல்களைத் தமிழகத்தில் அச்சிடுகின்றார்கள். தாயகத்தில் உருவான அச்சகங்கள் பல இன்றைய நிலையில் தமிழகத்திலும் வேரூன்றியுள்ளதால் ஈழத்து வெளியீட்டாளர்கள் தமிழகத்தில் தம் நூலைப் பதிப்பிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதில்லை. ஈழத் தமிழர்களின் தமிழக வெளியீடுகள் இலங்கை அச்சகச் சட்டத்தின் புவியியல்ரீதியான வரையரைக்குள் அகப்படுவதில்லை. தமிழகத்தின் தேசிய நூற்பட்டியலிலும் இவை அனைத்தும் சேர்த்துக்கொள்ளப் படுவதுமில்லை. தமது நூலை வரலாற்றுப் பதிவாக்குவதில் எமது எழுத்தாளர்கள் சிலரின் அக்கறையின்மையும் இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இதே நிலைதான் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, ஸ்கன்டினேவிய நாடுகளிலும் காணப்படுகின்றது. Desk Top Publishing என்ற இலகுவான பதிப்பு முறை இங்குள்ள எழுத்தாளர்களின் வீட்டுக் கணனிகளில் குடிகொண்டிருப்பதால், புலத்தில் நூல்வெளியீடுகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. ஆக மொத்தம், இன்று தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்படும் எந்தவொரு நூலும் தனது வெளியீடு பற்றிய பதிவை உலகில் எங்குமே மேற்கொள்ள வாய்ப்பில்லாது காணப்படுகின்றது.
குறிப்பிட்ட நாட்டில் வெளியிடப்படும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூலொன்றை இன்னொரு நாட்டில் வாழும் மற்றொருவர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இன்று அரிதாகவேயுள்ளது. நூல் மட்டுமல்ல, நூல் பற்றிய செய்திகளே உரியகாலத்தில் வந்து சேர்வதென்பது அரிதாகவுள்ளது. தாயகத்திலும், புகலிடத்திலும் வெளிவரும் சஞ்சிகைகள் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை அவதானிக்க முடிந்தாலும், அவைகூட விநியோகச் சிக்கலுக்குள் அல்லலுற்றுக் குறுகிய வாசகர் வட்டத்துக்குள் தம்மை அடக்கிக்கொள்கின்றனர். அவற்றால் வாசகருக்குத் தாம் அறிமுகம் செய்யும் நூலைப் பெற்றுக்கொடுக்கவும் முடிவதில்லை.
உலகெங்கும் சிதறுண்டு கிடக்கும் எமது அறிவுத்தேட்டங்களைத் தேடித்தொகுத்து வகைதொகையாகப் பிரித்து வரலாற்று ஆவண மூலமாக மாற்றும் ஆரோக்கியமான முயற்சி எதுவும் தாயக மண்ணில் பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், சிறு முயற்சிகளாக காலத்துக்குக்காலம் இலக்கியகர்த்தாக்கள் சில வரையறைகளுக்குள் இயங்கி, துறைசார் நூல்களைத் தேர்ந்து அவற்றைப் பதிவு செய்து வந்துள்ளமையை அறிய முடிகின்றது. இவ்வகையில் தனிநபர் நூல்விபரப்பட்டியல்கள், கண்காட்சி மலர்கள், தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுமலர்கள், பிரதேசவாரியான நூல்விபரப்பட்டியல்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இதை விட, இலங்கை நூலகச்சங்கத்தின் இடைநிலைப்பரீட்சையின் ஒரு அங்கமாகப் பரீட்சார்த்திகள் சமர்ப்பித்து வரும் நூல்விபரப்பட்டியல்களில் பல தமிழ்ப் பிரதேசங்களுக்குரிய நூற்பட்டியல்களும் அடங்குகின்றன. இவை கையெழுத்துப் பிரதிகளாக இலங்கை நூலகச் சங்கத்தின் கோவைகளில் இன்றும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மேற்கண்ட முயற்சிகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய ஒரு முழுமையான வரலாற்றுப் பார்வையைப் பெற ஆய்வாளர்களுக்கு உதவும் என்று கூறமுடியாதுள்ளது.
இந்நிலையிலேயே இலண்டனிலிருந்து “நூல்தேட்டம்” என்ற பெயரில் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான பதிவேடு ஒன்றினை கடந்த 2000ம் ஆண்டு முதல் தொகுத்து வருகின்றேன். இலங்கை எழுத்தாளர்கள், தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் ஏறத்தாழ 500 பக்கங்கள் வரையில் கொண்டுள்ளன. இதில் இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஆங்காங்கே தமிழில் வெளியிட்டு வரும் நூல்கள் அனைத்தும் பதிவாகி வருகின்றன. தனி நூல்கள், தொகுப்பு நூல்கள் என்பன அவை எத்துறையில் எழுதப்பட்டிருப்பினும் இங்கு பதிவாகும் தகுதி பெறும். நூலகங்களில் பயன்படுத்தப்படும் டூவி தசாம்சப் பகுப்பு முறையின் படி நூல்கள் பாடவாரியாகத் தொகுக்கப்பட்டும், ஆசிரியர் அகரவரிசை அட்டவணை, நூல் தலைப்பு அட்டவணை என்பவற்றை பின்னிணைப்பாகக் கொண்டும் நூல்தேட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இத்தொகுதி ஆண்டுதோறும் அச்சிடப்படுவதால், இலங்கை புத்தக விற்பனையாளர்களிடம் இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன், உலகெங்கிலும் இன்றளவில் (பிரித்தானிய நூலகம் உள்ளிட்ட) தமிழியல் சார்ந்த துறையையைக் கொண்ட அனைத்து நூலகங்களிலும் நூல்தேட்டம் உசாத்துணைப் பிரிவில் பேணப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இலங்கையில் தேசிய நூலகம் உள்ளிட்ட பிரதான தமிழ் நூலகங்கள் அனைத்தும் நூல்தேட்டம் தொகுதியைத் தமது உசாத்துணைப்பிரிவில் வைத்திருக்கின்றன.
இன்றைய நிலையில், தமிழகத்தில் தமது நூல்களை அச்சிட்டு வரும் இலங்கை எழுத்தாளர்களிடம் அன்பான வேண்டுகோள் ஒன்றினை விடுக்க விரும்புகின்றேன். எனது முயற்சி எந்தவொரு அரசாங்கத்தையோ, சமூக சேவை நிறுவனங்களையோ சார்ந்து அவர்களது நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவில்லை. இதுவொரு தனிப்பட்ட முயற்சி. எனது சொந்த வருவாயிலேயே இந்த வரலாற்றுப் பதிவினை சுதந்திரமாகவும், தனிமனித முயற்சியாகவும் மேற்கொண்டு வருகின்றேன். இதற்கு முற்றுமுழுதாக எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையுமே நம்பியிருக்கிறேன்.
நீங்கள் நூல்களை வெளியிடும் போது அந்நூலின் ஒரு பிரதியை எனது முகவரிக்குத் தபாலில் அனுப்பி வையுங்கள். உங்கள் நூல் பற்றிய செய்தி உலகெங்கும் பரந்து வாழும் எமது உடன்பிறப்புக்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாக அமையும்.
என்னுடன் தொடர்புகளை மேற்கொள்ள கீழ்க்கண்ட முகவரியைப் பயன்படுத்தவும்.
N.Selvarajah
N.Selvarajah
Bibliographer- Noolthettam
48 Hallwicks Road
LU2 9BH, United Kingdom
e-mail: selvan@ntlworld.com
No comments:
Post a Comment